
சென்னை பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 1,420 பேருந்து நிறுத்தங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல நிறுத்தங்கள் உடைந்த கூரைகள், மோசமான இருக்கைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் பழுதடைந்துள்ளன. இதில், 700 நிறுத்தங்கள் ஒப்பந்தக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் மாநகராட்சி கட்டிப்பாட்டில் உள்ள 720 நிறுத்தங்களில் 149 நிறுத்தங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டினம்பாக்கம் சந்திப்பு, சாந்தோம், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதில் முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் 3டி வடிவிலான நவீன நிழற்குடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்டமாக 12 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் உள்ள 81 பேருந்து நிறுத்தங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளது.
இந்த 3D பேருந்து நிறுத்தங்களை விரைவாக நிறுவ முடிவதுடன், தேவைப்படும் போதும் வேறு இடத்திற்கு மாற்றவும் முடியும். இந்த நிறுத்தத்தில் போஸ்டர் ஒட்ட முடியாது. மேலும், சிசிடிவி மூலம் பேருந்து நிறுத்தத்தை கண்காணிப்பதுடன், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Join Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .
Source : https://tamil.news18.com/