தனித்து போட்டி... விஜய் போட்டியிடும் தொகுதி... தவெக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை?
214 News > Tamilnadu News
மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பால் விலை, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அரசுக்கு எதிராகவும், 3ஆவது மொழியை திணிக்க முயலும் மத்திய அரசின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்ற நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் காலை முதலே கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரத் தொடங்கினர். காலை 10.15 மணியளவில் விஜய் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தொண்டர்களை பார்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தார்.
அதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியின் செயல் திட்டம், நிர்வாகிகள் நியமனம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டாம்; தனித்து போட்டியிடலாம் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசியபோது, அவர் சிரித்தப்படியே கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கருத்து வைக்கப்பட்டது. தற்போது இது தொடர்பாக தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதமே ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க : சுவையில் மயக்க வைக்கும் மஞ்சள் பாறை மீன்... மூளை மற்றும் நரம்பு நோய்களுக்கு பெஸ்ட் கடல் உணவு...
மேலும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. எப்போதும், ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும், தங்கள் தலைவர் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என முனைப்பு காட்டுவர். அதேபோல் தான் தவெகவின் தலைவர் விஜய் தங்கள் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் தங்களின் ஆர்வத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
மேலும் மாநாடு நல்ல முறையில் ஏற்பாடு செய்ததாக நிர்வாகிகளை பாராட்டியபோது, உணர்ச்சி பெருக்குடன் விஜய் கண்கலங்கியதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தொடர் விமர்சனத்திற்கு யாரும் எதற்கும் செவி சாய்க்காமல் கட்சிப்பணியை மட்டும் பாருங்கள் என்று நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Join Tamilnadu Makkal Whatsapp Group : https://chat.whatsapp.com/ElvJKLyTpMUL63kVSBwU0p
இதை பற்றிய உங்களது கருத்தை Comment Box இல் தெரிவிக்கவும் .